கொங்கு மண்ணின் அசல் பாரம்பரிய கலைகளில் ஒன்றான வள்ளி - கும்மி நடனத்தைத் தமிழகம் மட்டுமின்றி உலகமே அறியச் செய்து, தற்பொழுது ஆலமரம் போல் தழைத்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கோவையின் புகழ்பெற்ற 'வள்ளி - முருகன் கலைக் குழுவின்' 10-வது ஆண்டு மெகா விழா, கோவையில் அரங்கேறியது."
கலாச்சாரப், பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில், ரத்தினபுரி பகுதியில் இன்று மாலை அரங்கேறிய இந்த பிரம்மாண்ட வள்ளி - கும்மி நடனம் அங்கு கூடி இருந்த பொதுமக்களை கண் கவரச் செய்தது.
கோவை வள்ளி - முருகன் கலைக்குழு, கடந்த 2017-ஆம் ஆண்டு மிகச் சாதாரண ஒரு சிறு கலைக்குழுவாகத் தனது தூய்மையான கலைப் பயணத்தைத் துவங்கியது. முருகப் பெருமானின் அலாதி ஆசியோடு, கடந்த ஒன்பது ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்கேற்றங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அசாத்திய சிறப்பு கலை நிகழ்ச்சிகளையும் இக்குழுவினர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்திக் காட்டி உள்ளனர்.
இந்தக் கலைக் குழுவின் முதன்மை ஆசிரியர் அனுப்பப்பட்டி பழனிச்சாமி மற்றும் இணை ஆசிரியர்களான ரங்கநாதன், தயாநிதி, மெய்யரசு போன்ற அர்ப்பணிப்புமிக்க மூத்த கலைஞர்கள், நம் மண்ணின் பாரம்பரியக் கலையான வள்ளி - கும்மி நடனத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் திட்டத்துடன் உழைத்து வருகின்றனர்.
இவர்களது அசைக்க முடியாத முயற்சியால், இன்று இக்கலைக்குழு பத்தாவது ஆண்டில் கம்பீரமாக அடியெடுத்து வைத்து உள்ளது.
கலைக் குழுவின் இந்த 10-வது மெகா ஆண்டு விழாவை முன்னிட்டு, கோவை ரத்தினபுரி பகுதியில் அமைந்து உள்ள அருள்மாரியம்மன் கோவில் முன்பு அசாத்திய சிறப்பு வழிபாடுகளும், அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட கும்மி நடன விழாவும் ஒருங்கிணைக்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற சிறுமிகள் முதல் பெண்கள் வரை அனைவரும், ஒரே நிறத்திலான பாரம்பரிய வண்ண ஆடைகளை அணிந்து கைகளில் கும்மித் தாளமிட்டு, முருகப் பெருமான் மற்றும் வள்ளியின் வரலாற்றுப் பாடல்களைப் பாடியபடி, அவர்கள் ஆடிய வள்ளி - கும்மி நடனம், பார்ப்பவர்களின் கண்களைக் கொள்ளை அடிக்கும் வகையில் மிக நேர்த்தியாக அமைந்து இருந்தது.