சரவணம்பட்டி பகுதியில், 50 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் வாங்கிய 9.54 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று தெய்வீக நகர்மனை பகுதி மக்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
சரவணம்பட்டி பகுதியில் உள்ள தெய்வீக நகர்மனை பகுதியில், 1976-ஆம் ஆண்டு 96 பேர் 9.54 ஏக்கர் நிலத்தை தலா 2 முதல் 5 சென்ட் வரை மனைகளாகப் பிரித்து வாங்கியுள்ளனர்.
இந்த மனைப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த நிலம் கௌமார மடாலயத்திற்குச் சொந்தமானது எனக் கூறி, 96 நில உரிமையாளர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நிலத்தை அபகரித்து அடுக்குமாடிக் குடியிருப்பு, ஐடி பார்க் கட்ட முயற்சி நடைபெறுகிறது.
தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சிவராமன் மற்றும் இந்து அமைப்பில் இருப்பதாகக் கூறப்படும் சுரேஷ்பாபு ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலம் முன்னாள் மடாதிபதி சுந்தரசாமிக்குத் தனிப்பட்ட முறையில் சொந்தமானதாக இருந்தது. அவரே நிலத்தை விற்பனை செய்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறையைச் சமாளித்துவிட்டு ஒட்டுமொத்த நிலத்தையும் அபகரிக்கத் திட்டமிடுகிறார்கள்.
தற்போதைய கௌமார மடாலய மடாதிபதி குமரகுருபர சுவாமிக்கு பணத்தாசை காட்டி சிலர் இயக்குகின்றனர்.
இந்த அரசு ஏழை மக்களுக்கு தீர்வு கொடுக்கும் என்று நம்பினோம். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் கேட்டபோது, மடாலத்திற்கு வாக்கு கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார். தற்போதைய அரசு மடாலயத்திற்கு ஆதரவாகச் செயல்படுகிறது.
ஏழை மக்களிடமிருந்து நிலத்தைப் பறிக்கும் முயற்சியைத் தடுத்து, அவர்களின் நில உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.