கோவை.
கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒன்றிய பாஜக மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள், விவசாய விரோத கொள்கைகள் இவைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இன்று 10.08.2026 காலை 10.00 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 36 பெண்கள் உட்பட 230 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.
மறியல் போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் சி.தங்கவேல், மாநில செயலாளர் எம்.ஆறுமுகம் எக்ஸ்.எம்.எல்.ஏ., சி.ஐ.டி.யு. மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மனோகரன், ஹச்.எம்.எஸ். சங்கத்தின் மாநில செயல் தலைவர் டி.எஸ்.ராஜாமணி, மாவட்ட செயலாளர் மனோகரன், ஐ.என்.டி.யு.சி. புவனேஸ்வரி, சண்முகம், துளசிதாஸ், ஏ.ஐ.சி.சி.டி.யு. பாலசுப்பிரமணியன், பிலோமினா, எம்.எல்.எப்., ஷாஜகான், ரங்கநாதன், எல்.பி.எஃப். சி.டி.சி. துரை, வணங்காமுடி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு கைதாகினார்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும், பழைய தொழிலாளர் நல பாதுகாப்பு சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
அகவிலை படியுடன் இணைக்கப்பட்ட சட்டபூர்வ குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 42ஆயிரம் என்று சட்டம் இயற்றி வழங்க வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் உயர்வு செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் உறுதியான அரசு கொள்முதல் விலையை நிர்ணயித்து வழங்க வேண்டும்.
விவசாய மற்றும் தொழிலாளர் விரோத வெளிநாட்டு வர்த்த ஒப்பந்தங்களை கைவிட வேண்டும். தனியார் மயமாக்கல் மற்றும் தேசிய சொத்து பணமயமாக்கல் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொதுக்கல்வி மற்றும் பொது சுகாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். பொது விநியோகத்தை ( பி.டி.எஸ். ) பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.
அரசியல் அமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.