மதுரை செப் 11, தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம் செய்யபடவுள்ளனர் என்றும் செவிலியர் பற்றாக்குறை என்பது முழுமையாக சரி செய்யப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கோபிசன், மருத்துவமனை டீன் அருண் சுந்தரேஷ் குமார், மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து பிரசவ வார்டு பகுதிக்கு சென்ற அமைச்சர் அருண்ராஜ், அங்கிருந்த பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். குழந்தைகளின் தாய்மார்களிடம் விரைவில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வழங்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
முன்னதாக, அமைச்சர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருடன் மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ்,
தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை வசதிகளை மேம்படுத்துதல், புதிய மருத்துவ உபகரணங்கள் கொள்முதல், செவிலியர் பற்றாக்குறையை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றனஎன்றும் அவர் தெரிவித்தார்.
மதுரைக்கு தமிழக பட்ஜெட்டில் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரையில் மாநில அளவிலான புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரூ.84 கோடி மதிப்பில் மாநில அளவிலான மருத்துவ சிகிச்சை மையம் ராமநாதபுரம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைய உள்ளது. இதற்காக கூடுதல் இடம் தேவைப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் பேசி சட்டரீதியான நிர்வாக நடைமுறைகள் முடிக்கப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் ரூ.44 கோடி மதிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட உள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ.7.5 கோடி மதிப்பில் புதிய மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு ரூ.856 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன என்றார்.
மேலும், தமிழகம் முழுவதும் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக பல்வேறு இடங்களில் கூறப்பட்டு வரும் நிலையில், விரைவில் 4,500 செவிலியர்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் செவிலியர் பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளாக புதிய செவிலியர் கல்லூரி அறிவிக்கப்படாத நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய செவிலியர் கல்லூரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மதுரையும் இடம்பெற்றுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 1940ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு தற்போது செயல்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக அதிநவீன புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கான திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்.
இதனிடையே, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் முதல்வரின் வெளிநாட்டு பயணம் காரணமாக தாமதமாகியுள்ளது. முதல்வர் வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பியதும், திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.