கோவை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய மண்டலக் குழு கூட்டம் இன்று 28/7/2026 மாலை 6.00 மணிக்கு கோவை பாப்பநாயக்கன் பாளையம், காய் கடை பஸ் ஸ்டாப் அருகில் உள்ள, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய மண்டல குழு அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி காக்ரோச் ஜனதா பார்ட்டி ( CJP ) இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராடி வருகிறார்கள்.
பேராசிரியர் சோனம் வாங்சுக் அவர்கள் ஜந்தர் மந்திரில் 20 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஒன்றிய அரசு செவி சாய்க்காத நிலையில், நேற்று நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை இளைஞர்கள் நடத்தினர்.
நாடாளுமன்ற நோக்கி பேரணியாக சென்ற லட்சக்கணக்கான இளைஞர்களை டெல்லி காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயற்சித்தனர்.
ஆனாலும் பேரணி மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டது. காவல்துறையினர் போராடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டனர். காவல் துறையினருடன் சேர்ந்து கொண்டு குண்டர்களும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமுற்று உள்ளனர்.
மாணவர்கள் எழுப்பும் கோரிக்கை நியாயமானது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட டாக்டராக முடியும் என்ற நிலை இருந்ததை மாற்றி, நீட் தேர்வு முறையை ஒன்றிய அரசு மாணவர்கள் மீது திணித்தது.
பல லட்சம் ரூபாய் செலவு செய்தால் தான் நீட் தேர்வு எழுத முடியும் என்ற நிலையில், தேர்வை முறையாக நடைத்தாமல் தொடர்ந்து அதில் முறைகேட்களும், வினாத்தாள்கள் கசிவதும் வாடிக்கையாகி வந்துள்ளது.
இதனால் சுமார் ஏழரை கோடி இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவேதான் இதற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை சி.ஜே.பி. மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
ஆனால் பிரச்சனைக்கு முறையாக பேசி தீர்வு காணாமல் மாணவர்களை போலீசை வைத்து அடித்து துன்புறுத்தி ஒடுக்கி விடலாம் என்ற முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.
மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்களை ஏவியும் உள்ளது ஒன்றிய அரசு. சமூக வளைத்தளங்களில் வரும் காட்சிகள் மனதை பதற வைக்கிறது.
போராடும் நம் பிள்ளைகள் கொடூரமாக தாக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே, இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய மண்டல குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் கலை அஸ்வினி தலைமை தாங்கினார். அரசியல் நிலவரங்கள் குறித்து மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கே.எம்.செல்வராஜ் விளக்கி பேசினார். மத்திய மண்டல செயலாளர் கே.ரவிந்திரன், துணை செயலாளர் பி.அறிவொளி, பொருளாளர் நந்தகுமார், ஏ.பி.மணிபாரதி, மண்டலக்குழு உறுப்பினர்கள் ஏ.சுப்பிரமணியன், பழனிசாமி, தியாகராஜன், எஸ்.மாணிக்கம், பி.சற்குணம், ஜே.கலா உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.