விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகரான கோவை புளியகுளம் 19 அடி உயர முந்தி விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலைகளில் ஒன்றாக கருதப்படும் புலியகுளம் முந்தி விநாயகர், ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட 19 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும், சுமார் 190 டன் எடை கொண்டதாகவும் உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனத்தால் சிறப்பு சந்தனக் காப்பு செய்யப்பட்டு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், சுமார் 2 டன் மலர்களைக் கொண்டு விநாயகருக்கு சிறப்பு மலர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து முந்தி விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக இந்து அறநிலையத்துறை சார்பாக கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்புப் பணிக்காகவும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.