கந்த சஷ்டி விழா கோலாகலமாகத் தொடக்கம்!

முருகப்பெருமானுக்கு ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் – நவம்பர் 15-ல் சத்ரு சம்ஹார பூஜை, 16-ல் திருக்கல்யாண வைபவம்..

கோவையில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு ஆறு நாட்கள் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள்  பக்தி பரவசத்துடன் தொடங்கின.

கோவை இடையார்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள முருகப்பெருமான் சன்னதியில் கந்த சஷ்டி விழா சிறப்பு பூஜைகள் தொடங்கின. இதனை முன்னிட்டு வரும் நவம்பர் 16ஆம் தேதி வரை தொடர்ந்து ஆறு நாட்கள் முருகப்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், வண்ணமயமான அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் நவம்பர் 15ஆம் தேதி சத்ரு சம்ஹார பூஜை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆறு வகையான வண்ணமயமான மலர்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், தேர் வலம் வருதல் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இதன் தொடர்ச்சியாக நவம்பர் 16ஆம் தேதி முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுவதுடன், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

கந்த சஷ்டி விழாவையொட்டி ஆலயம் முழுவதும் பக்தி மணம் கமழும் ஆன்மிகச் சூழல் நிலவி வருகிறது.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்