அதிகாலையில் திரளும் ஆயிரக்கணக்கான கிளிகள்!

சிவகங்கை

சிவகங்கை அருகே, அதிகாலை நேரம் என்றாலே ஆயிரக்கணக்கான கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து சேரும் இடமாக மாறியுள்ளது பையூர் அரைகாசு அம்மன் கோவில் கண்மாய்க்கரை.

இதற்கு முக்கிய காரணம், கடந்த 20 ஆண்டுகளாக தினமும் தவறாமல் கிளிகளுக்கு உணவளித்து வரும் பறவை நேசர் முனியாண்டி.

சிவகங்கை அருகே உள்ள சந்தனக் கண்மாய் ஆலமரத்தடியில், கிளிகளுக்காக கான்கிரீட் மேடை அமைத்து, அதிகாலை பொழுது விடியும் நேரத்திலேயே தானியங்கள் உள்ளிட்ட உணவுகளை தயார் செய்து வைக்கிறார் முனியாண்டி.

உணவு வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கிளிகள் கூட்டம் கூட்டமாக அங்கு வந்து சேர்கின்றன.

வானில் பச்சை நிறத்தில் ஆயிரக்கணக்கான கிளிகள் ஒன்றாக பறந்து வந்து, உணவு வைக்கப்பட்டுள்ள இடத்தில் திரண்டு அமர்ந்து உணவருந்தும் காட்சி, பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மனிதர்களின் அன்பையும், தங்களுக்கான உணவு கிடைக்கும் இடத்தையும் அறிந்தது போல, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் கிளிகள் இங்கு வந்து உணவருந்திச் செல்வது வழக்கமாகிவிட்டது.

ஆரம்பத்தில் ஒரு சில பறவைகளுக்கு உணவளிக்கத் தொடங்கிய முனியாண்டி, நாளடைவில் கிளிகளின் வருகை அதிகரித்ததால், தொடர்ந்து உணவளிப்பதை தனது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொண்டார்.

கிளிகளுக்காக தனது நேரத்தையும், பொருளாதாரத்தையும் ஒதுக்கி வரும் முனியாண்டி, கடந்த 20 ஆண்டுகளாக இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறார்.

கான்கிரீட் கட்டிடங்கள் பெருகி வரும் நிலையில், பறவைகளின் இயற்கையான வாழ்விடங்கள் குறைந்து வருகின்றன. இத்தகைய சூழலில், பறவைகளுக்கு உணவும் தண்ணீரும் வழங்கி அவற்றை பாதுகாத்து வரும் முனியாண்டியின் செயல், அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

இதனால், அப்பகுதி மக்கள் அவரை அன்புடன் “கிளி நேசன்” என்றே அழைத்து வருகின்றனர்.

பறவைகளுக்கு உணவளிப்பதால் மனநிறைவு கிடைப்பதாகவும், வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பதாகவும் கூறும் முனியாண்டி, “பறவைகளை பாதுகாப்பது மனிதர்களின் கடமை” என்கிறார்.

மேலும், பறவைகளை நேசிப்பதன் மூலம் இயற்கையை நேசிக்க வேண்டும் என்றும், இயற்கையை பாதுகாத்தால்தான் எதிர்கால தலைமுறையையும் பாதுகாக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

அதிகாலையில் ஆயிரக்கணக்கான கிளிகள் ஒன்றாக திரண்டு உணவருந்தும் இந்தக் காட்சி, இயற்கையின் மீதான மனிதர்களின் அன்பையும், மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் இடையேயான அழகான உறவையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்

Feed not found.