கோவை மாவட்ட அனைத்து கூட்டுகுழு ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவர் செல்வம் பேட்டி கோவை, மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 13 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாததே இதற்கு முக்கிய காரணம் என்றும், கோவை மாவட்ட அனைத்து கூட்டுகுழு ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஓலா, உபேர், ராபிட்டோ உள்ளிட்ட பைக் டாக்ஸி, போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் ஆட்டோ ஓட்டுநர்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் குடும்பத்தை நடத்த முடியாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 13 வருடங்களாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், அண்மையில் தற்போதைய அரசு ஆணையாளர், மற்றும் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின்படி தீபாவளிக்குள் மீட்டர் கட்டணம் இறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆட்டோ சங்கங்களின் சார்பில் குறைந்தது 1.5 கிலோ மீட்டருக்கு ரூ. 60-ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 30-ம் நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசு தரப்பில் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ. 50 எனவும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியது போல அனைத்து ஆட்டோக்களுக்கும் டிஜிட்டல் மீட்டர் அரசாங்கத்தின் மூலமாக இலவசமாக வழங்கப்பட வேண்டும். மேலும், இதற்காக வழங்கப்பட்டுள்ள,
6 மாத கால அவகாசத்திற்குள் மீட்டர்கள் மற்றும் செயலி முறை அமல்படுத்தப்பட வேண்டும். பைக் டாக்ஸி மற்றும் இதர தனியார் செயலிகள் முறைகேடாக இயக்கப்படுவதால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசும் காவல்துறையும் உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவதாகவும், ஆயினும் ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டணத்திற்கு தற்பொழுது, எங்களது சங்கம் ஆட்டோக்களை இயக்க தயார் என்று தெரிவித்தார்.