சார்பதிவாளர் அலுவலகம் வெறிச்சோடியது

பதிவுத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கும், HUB E-Tender மற்றும் STAR 3.0 திட்டங்களை செயல்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பத்திர எழுத்தர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளாக நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தின் சார்பதிவாளர் அலுவலகங்கள்  முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம், சூலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில்  பத்திர எழுத்தர்கள், நகல் தட்டச்சு செய்வோர், கணினி மூலம் பத்திரங்கள் தயாரிப்போர் என பதிவுத்துறை சார்ந்த தொழில் புரியும் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,  சார்பதிவாளர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் பத்திரப்பதிவுக்கு வர முடியாமல் திரும்பிச் சென்றனர்.

போராட்டத்திற்கான காரணம் என்ன?

தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி STAR 3.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது காகிதமில்லா மற்றும் நேரில் வரத்தேவையற்ற (Faceless Registration) பதிவு முறை ஆகும். இதனுடன், மாதிரி பதிவு மையங்கள் (Model Registration Hubs - MRH) அமைக்க E-Tender எனப்படும் இ-ஹப் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.  

இந்த புதிய நடைமுறை மூலம் பதிவுத்துறை சேவைகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், இதனால் தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் ஆவண எழுத்தர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.  

சங்க நிர்வாகிகள் கண்டனம்:

இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில்,
"பதிவுத்துறையில் தனியார் மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் போலிப் பத்திரங்கள் உருவாகும் அபாயம் உள்ளது. ஆவணங்களை சரிபார்க்கும் பாரம்பரிய முறை ஒழிக்கப்பட்டால், சொத்து வில்லங்கங்கள் அதிகரிக்கும். சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்களது சொத்துகளைப் பதிவு செய்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். பொதுமக்களின் சொத்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகும். எனவே, HUB E-Tender மற்றும் STAR 3.0 திட்டத்தை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடைபெறும்" என்றனர்.

தமிழக பதிவுத்துறையில் இ-டெண்டர் முறைக்கு எதிராக கடந்த அக்டோபர் 26-ம் தேதி முதல் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் பதிவுப் பணிகளை புறக்கணிக்க தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் சங்கம் அறிவித்திருந்தது.  

தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை ஆண்டுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டித் தரும் முக்கிய துறையாகும். இங்கு சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவண எழுத்தர்கள், தட்டச்சர்கள் மற்றும் உதவியாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்