கோவை ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் தினம்,  நினைவு கல்வெட்டு திறப்பு.

கோவை ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் தினம்,  நினைவு கல்வெட்டு திறப்பு.

கோவை.
கோவை ஸ்டேன்ஸ் மில் தியாகிகளின் 80-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று 11.11.2026 கோவை ஸ்டேன்ஸ் மில் வளாகத்தில் செங்கொடி ஏற்றி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 
தியாகிகளின் நினைவாக ஏஐடியூசி, சிஐடியு சங்கங்களின் சார்பில் கல்வெட்டு அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 
இந்திய தொழிற்சங்க வரலாற்றில் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்காக துப்பாக்கிச் சூட்டிற்கு நெஞ்சைக் காட்டி வீரமரணமடைந்த கோவை ஸ்டேன்ஸ் மில் தியாகிகளின் 80-ஆம் ஆண்டு நினைவு தினம் புதனன்று அனுசரிக்கப்பட்டது. 
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த 1946 நவம்பர் 11 அன்று, உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப் போராடிய மில் தொழிலாளர்கள் மீது பிரிட்டிஷ் ஆட்சியில் ஏவப்பட்ட கொடூர அடக்குமுறையில், கர்ப்பிணிப் பெண் பாப்பம்மாள் மற்றும் அம்மு கோபால் உள்ளிட்ட பெண் தொழிலாளர்கள் தாக்கப்பட்டும், காவல்துறையின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மந்திரியப்பன், குள்ளப்பன், பழனியப்பன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்பட 6 தோழர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மொத்தம் 11 தோழர்கள் கொல்லப்பட்டனர். 
அந்த 11 தோழர்களின் உடல்களும் ஆலை வளாகத்திலேயே எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. 
தொழிலாளி வர்க்கத்தின் வீரம் செரிந்த போராட்ட வரலாற்றில் ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்களின் போராட்டம் முக்கிய இடம் பிடித்துள்ளது. 
இந்த வீரம் செரிந்த தியாகிகளின் 80-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவர்கள் உயிர் தியாகம் செய்த அதே இடத்தில், ஏஐடியூசி மற்றும் சிஐடியு பஞ்சாலை சங்கங்களின் சார்பில் நினைவுக் கல்வெட்டு அமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. 
இந்த நிகழ்விற்குத் சிஐடியூ மில் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.பத்மநாபன் மற்றும் ஏஐடியுசி மாவட்ட கவுன்சில் செயலாளர் சி. தங்கவேல் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஏஐடியுசி கொடியை ஏஐடியூசி மாவட்ட கவுன்சில் செயலாளர் சி.தங்கவேலும், சிஐடியு கொடியை கே.எஸ்.கனகராஜும், ஏற்றி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தியாகிகளின் நினைவாக அமைக்கப்பட்ட கல்வெட்டை சிஐடியு சார்பில் சி.பத்மநாபனும், ஏஐடியுசி மூத்த தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் கே.சுப்பிரமணியனும் இணைந்து திறந்து வைத்தனர்.
தியாகிகளின் தியாக வரலாறு குறித்து வழக்கறிஞர் கே.சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். தியாகிகளின் வரலாறு உழைக்கும் வர்க்கத்திற்குப் பெரும் எழுச்சியைத் தந்துள்ளது என தலைவர்கள் தங்கள் உரையில் தெரிவித்தனர். 
இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, மற்றும் ஏஐடியுசி சங்க நிர்வாகிகள் இ.ஏ.பூபதி, ஞானவேல், கே.ஆர். தங்கராஜ் ,பொன்ராஜ், சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்