சிறப்பு வாரியம் கோரி தமிழக முதல்வருக்கு மனு!


​தமிழகத்தில் முத்தரையர் சமூக மக்கள் 29 பிரிவுகளாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தனியாக "முத்தரையர் புனரமைப்பு வாரியம்" அமைக்க வேண்டும் என்றும், கல்வியில் 20 சதவீத இடஒதுக்கீடு மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் என். நடராஜ் தமிழக முதல்வருக்குத் தபால் மூலம் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
​அந்த மனுவில், கோவை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிசை வீடுகள் மற்றும் பட்டா இல்லாத வீடுகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் முத்தரையர் சமூக மக்களுக்கு, அவர்கள் தற்போது வசிக்கும் இடத்திலேயே உடனடியாக இலவச பட்டா வழங்க வேண்டும் எனவும், சொந்த வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்து தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
​மேலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை பகுதியை அடுத்துள்ள பவானிசாகர் பகுதியில் வசித்து வரும் முத்தரையர் சமுதாய மக்களின் பாரம்பரியத் தொழில் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்