மதுரை: 29.10.26
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையில் பங்கேற்க மதுரை வருகைதந்த எடப்பாடி பழனிசாமிக்கு
மதுரை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
தமிழக வெற்றிக் கழகத்தின் 6 மாத ஆட்சியில் நிர்வாகக் குளறுபடிகள் மலிந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் தற்போது கடுமையான மின்வெட்டு நிலவுவதாகவும், அரசு எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அவர்,
கடந்த காலங்களில் யூனிட் மின்சாரம் ரூ.11.50 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர்,
தவெக ஆட்சியில் செயற்கையாக மின் தட்டுப்பாட்டை உருவாக்கி ரூ.37.50 முதல் ரூ.41.50 வரை மின் கொள்முதல் செய்ய முயன்றதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும்,எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த பின்னரே ரூ.41.50-க்கான மின் கொள்முதல் டெண்டரை அரசு ரத்து செய்தது என்றும்,
80% கூடுதல் விலைக்கு மின் கொள்முதல் செய்ய முயன்றதன் மூலம் இத்துறையில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும்,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது என்னும் அவர் கூறினார்.
முதலமைச்சர் ஆய்வு செய்துவிட்டு வந்த புழல் சிறையிலிருந்து 2 பேர் தப்பியோடியதைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிச்சாமி,
தேனி சிறைச்சாலையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடியது நிர்வாகத்தின் பலவீனத்தைக் காட்டுகிறது என்றார்.
தவெக ஆட்சியில் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் அதிகளவில் மாயமாகி வருவதாக வேதனை தெரிவித்த அவர்,
செஞ்சியில் மாயமான சிறுமியை ஒரு மாதமாகியும் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர்,
பட்டப்பகலில் மக்கள் நடமாடும் பகுதிகளில் கூட தொடர் கொலைகள் நடப்பதாக கூறினார்.
முதலமைச்சர் அரசு ஊழியரைப் போல காலை வந்து மாலை 6 மணிக்கே வீட்டுக்குச் சென்று விடுகிறார் என்றும்
மாலை 6 மணிக்குப் பிறகு எந்த மக்கள் பணிகளிலும் ஈடுபடாமல் அதிகாரிகளையும் சந்திப்பதில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
மேலும், நாகப்பட்டினத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக வழக்கறிஞருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டிய அவர்,
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்குக் கிடைத்த முக்கியப் பரிசு கடுமையான விலைவாசி உயர்வுதான் என்றார்.
அரிசி கிலோவுக்கு ரூ.20, பருப்பு 70%, சமையல் எண்ணெய் 50% வரை விலை உயர்ந்துள்ளது எனக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி,
தீபாவளிப் பண்டிகை நேரத்தில் ஆவின் இனிப்புப் பலகாரங்களின் விலையை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
சன்ன ரக அரிசி தருவதாகக் கூறி ரேஷன் அரிசியைப் பாலிஷ் செய்து ரூ.30-க்கு அரசு விநியோகிப்பதாகவும் கூறிய அவர்,
நெடுஞ்சாலைத்துறையில் முந்தைய ஆட்சியின் சாலைப் பணிகள் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர்கள் விடப்படவில்லை என்றும், சாலைப் பணிகள் முடங்கியதால் தமிழகம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுகின்றன என்றும் அதற்கான கட்டுமான பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
டிடிவி தினகரன் ஏற்கனவே அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், உண்மையான விசுவாசிகளுக்கு கட்சியில் உரிய பதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
காவிரி மற்றும் பவானிசாகர் ஆறுகள் மாசடைவதைத் தடுக்க அதிமுக கொண்டுவந்த 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தை உடனே அமல்படுத்த வலியுறுத்திய அவர்,
20 மாவட்ட மக்களின் குடிநீர் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசு அனுமதித்த இத்திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்றார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது குறித்த கேள்விக்கு, வழக்கு விசாரணை நடைபெறுவதால் கருத்து கூற முடியாது எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.