50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்

கோவை மாநகர் மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள், "பசுமை கோவை" பெயரில்  50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்

மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் அறிவிப்பு

வடகோவையில் உள்ள கோவை மாநகர் மாவட்ட திமுக அலுவலகத்தில், அவைத் தலைவர் எம்.பி. ராஜ்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளர் துரை செந்தமிழ்ச் செல்வன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கல்பனா செந்தில், பொருளாளர் எஸ்.எம். முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் மெட்டல் கண்ணப்பன், தலைமைக்கழக நிர்வாகிகள் பி. நாச்சிமுத்து, ராஜீவ்காந்தி, மரா. செல்வராஜ், தமிழ்மறை, பொதுக்குழு உறுப்பினர்கள் சரஸ்வதி, நோயல் செல்வம், கார்த்திகேயன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கழக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் அவர்களின்  50-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள், விளையாட்டுப் போட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள், ரத்ததான முகாம்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான நிகழ்ச்சிகளை எழுச்சியுடன் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும்,  வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்கான உரிய படிவங்களைப் பூர்த்தி செய்யும் வகையில், நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வாக்காளர் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களில் இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பொதுவாழ்வுப் பணிகள், தமிழக இளைஞர்கள் மீதான அக்கறை மற்றும் கோவை மாவட்டத்திற்கு அவர் வழங்கியுள்ள பல்வேறு திட்டங்களைப் போற்றும் வகையில், 'பசுமை கோவை' என்ற பெயரில் இந்த ஆண்டு முழுவதும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பூங்காக்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, முறையாகப் பராமரிப்பதுடன், பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளை வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், ஈரோடு மாவட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளிடம் தவறான நோக்கத்துடன் பேசுவது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கோவை மாவட்டத்தில் பெண் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீதான பாலியல் புகார் மற்றும் கோவை சுண்டப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகன ஷோரூம் பெண் உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நிகழ்வுகள் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த கவலையை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டது.

இத்தகைய சம்பவங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டதுடன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கையும் பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தவறியதாகக் கூறி, தமிழக அரசையும் முதலமைச்சரையும் வன்மையாகக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.

இவ்வாறு இக்கூட்டத்தில் நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்